தமிழக பாஜஜ தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்துக்களை கடுமையாக கண்டித்துள்ளார். நேற்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்ட கார்கே, உடனடியாக பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.தொடர் தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பாஜக தலைவர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் மக்களால் அடித்து விரட்டப்படும் காங்கிரஸ் கட்சி, தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் பாஜக தலைவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது அநாகரிக அரசியலின் உச்சம் என்று அவர் குறிப்பிட்டார்.காங்கிரஸ் கட்சியிலேயே வயதில் மிகவும் மூத்தவரான மல்லிகார்ஜுன கார்கே, நாட்டின் பிரதமரின் குடும்பத்தார் மீது இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது அக்கட்சியின் வளர்ப்பையே காட்டுவதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.

மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் நரேந்திர மோடியை, தேநீர் விற்றவர் என்றும், குடும்பம் இல்லாதவர் என்றும், தாயைப் பழித்தும் இன்று அவரது தந்தையையும் இகழ்வதாக அவர் குற்றம்சாட்டினார்.ஒட்டுமொத்த தேசமும் “மோடியின் குடும்பம்” என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டது போலத் தெரிவதாகவும், இந்தக் கீழ்த்தரமான அரசியலுக்காகவே மக்கள் காங்கிரஸை வெறுக்கிறார்கள் என்பது இன்னும் புரியவில்லை போலத் தெரிவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
பிரதமர் குறித்து நாவடக்கம் இன்றிப் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இல்லையேல் தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: பாஜக உடன் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! மோடி, அமித் ஷாவுடன் இணக்கம்? காங்கிரசில் அதிருப்தி!