விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. வரவிருக்கும் தேர்தலில் சமூக ஊடகங்களின் பங்கு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தச் சந்திப்பில், கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மருத்துவர் ராமதாஸ் தனது அதிருப்தியையும் வெளிப்படையாகப் பதிவு செய்தார். முன்னதாக, 2026 தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி மூன்றாவது நாளாக இன்றும் தைலாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் ராமதாஸ், சமூக ஊடகப் பேரவையின் மந்தமான செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். "நான் நினைத்த அளவிற்கு ஊடகப் பேரவை வெற்றி பெறவில்லை; ஊருக்கு இருவர் சரியாகச் செயல்பட்டிருந்தால் கூட இளைஞர்களின் வாக்குகளைக் குவித்துவிடலாம். ஆனால், இன்று நூறு பேர் மட்டுமே வந்துள்ளது வருத்தமளிக்கிறது" என வேதனை தெரிவித்தார். "ஊடகப் பேரவையும், திண்ணைப் பிரச்சாரமும் இணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். பிப்ரவரிக்குள் நாம் போட்டியிடும் தொகுதிகள் எவை என்று முடிவாகிவிடும்; அந்தத் தொகுதிகளில் சமூக ஊடகப் பிரிவினர் மிகத் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்" என அவர் அறிவுறுத்தினார். இந்தச் சந்திப்பில் பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, ராமதாஸின் பேரன்கள் சுகந்தன், முகுந்தன் மற்றும் ஊடகப் பேரவை தலைவர் சோழன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் ராமதாஸ், அரசியல் கேள்விகளுக்குத் தனது பாணியில் பதிலளித்தார். "கூட்டணி குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்" என ஒற்றை வரியில் பதிலளித்த அவர், பாஜக அல்லது திமுக தரப்பிலிருந்து யாரும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத் தெளிவுபடுத்தினார். சென்னை பயணம் குறித்த கேள்விக்கு, "சென்னைக்குப் போக எனக்கு நூறு வேலைகள் இருக்கும்; அதை உங்களிடம் சொல்லத் தேவையில்லை" எனச் சீறினார். ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தியது சட்டவிரோதம் என அவர் தேர்தல் ஆணையத்திற்குப் புகாரளித்துள்ள நிலையில், இன்று "அமைதியாக, நல்லபடியாகத் தேர்தல் நடக்க வேண்டும்" என்பதே எனது விருப்பம் எனத் தெரிவித்தார். பாமகவில் நிலவும் இந்த அதிகார மோதலுக்கு இடையே, இதுவரை 3,100-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ரயில் பயணிகள் கவனத்திற்கு! சென்னை எக்மோர் - விழுப்புரம் மெமு ரயில் பகுதி ரத்து! ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இதையும் படிங்க: “ராயப்பேட்டையில் குவியும் அதிமுக நிர்வாகிகள்!” ஜனவரி 9 முதல் நேர்காணல்; வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் காட்டும் வேகம்!