திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த குடிமங்கலத்தில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில்குமார் உத்தரவின் பெயரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய மூர்த்தி மற்றும் அவரது இளைய மகன் தங்கபாண்டி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை தனிப்படை போலீஸ் சார் நள்ளிரவில் சிக்கனூத்து அருகே கைது செய்தனர். இதையடுத்து இன்று காலை 6 மணியளவில் மணிகண்டனை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது சிக்கனூத்து ஓடை அருகே வந்தபோது திடீரென மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உடன் வந்த உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை வெட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த சக காவலர்களை தாக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது தற்காப்புக்காக ஆய்வாளர் திருஞானசம்பந்தம் மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டார்.
இதையும் படிங்க: மணிகண்டன் நெஞ்சுக்கு கீழ் ஒரு குண்டு.. முட்டிக்கு மேல் ஒரு குண்டு.. உண்மையிலேயே நடந்தது என்ன?
இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணன் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட தடையவியல் துறையினர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த ஓடை வழியாக பொதுமக்கள் செல்லாமல் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே மேற்கு மண்டல ஐ.ஜி சரவணகுமார் மற்றும் கோவை சரக டி ஐ ஜி சசிமோகன் திருப்பூர் எஸ்.பி கிரீஸ் யாதவ் ஆகியோர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஒரே புல்லட் தான்! உயிர் போயிடுச்சு.. என்கவுண்டர் சம்பவம் குறித்த அதிர வைக்கும் தகவல்கள்..!