நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் மாளிகை) தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் சார்பில் இன்று மாலை பாரம்பரிய தேநீர் விருந்து நடைபெற்றது. ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்வு, இம்முறை தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையேயான அரசியல் மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்: வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்தத் தேநீர் விருந்தில், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி விருதுகளை வழங்கித் கௌரவித்தார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் அவர் வழங்கினார். ஆளுநர் தனது மனைவியுடன் இணைந்து விருந்தினர்களின் இருக்கைக்கே சென்று அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.
அரசியல் தலைவர்கள் பங்கேற்பு: இந்தத் தேநீர் விருந்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் புதிய நீதி கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழக அரசு மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு: ஆளுநரின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் யாரும் இந்தத் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை இந்த நிகழ்வை முற்றிலுமாகப் புறக்கணித்தன.
இதையும் படிங்க: சென்னையில் கம்பீரமான குடியரசு தின விழா: ஆளுநர் ரவிக்கு முப்படைகள் அணிவகுப்பு மரியாதை!