சென்னை எண்ணூரில் இயங்கி வரும் ‘கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட்’ (CIL) அமோனியா உர நிறுவனத்திற்குச் சீல் வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடியாகப் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் அந்தப் பகுதி மக்களின் மனதை விட்டு நீங்காத நிலையில், பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை சட்ட ரீதியாக வலுப்பெற்றுள்ளது. திருவொற்றியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி, எண்ணூர் துறைமுகத்திலிருந்து கோரமண்டல் உர நிறுவனத்திற்குத் திரவ அமோனியாவைக் கொண்டு செல்லும் கடலுக்கடியில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 52-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்காக ரூ.5 கோடியே 92 லட்சம் இழப்பீடு வழங்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்தக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘உலகநாயகன்’ பட்டத்தை பயன்படுத்தத் தடை! ‘நீயே விடை’ நிறுவனத்திற்கு எதிராக கமல்ஹாசன் வழக்கு!

மனுதாரரான கே.குப்பன் தனது மனுவில், "இந்த வாயு கசிவு சம்பவம் போபால் விஷவாயு துயரத்திற்கு இணையானது; எனவே, அமோனியா பரிமாற்றம் மற்றும் சேமிப்பு போன்ற அபாயகரமான பணிகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். மேலும், வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வழங்கப்படாத முழு இழப்பீட்டையும் விரைந்து வழங்கச் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு போராட்டக் களம் உருவாவதற்கான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: "கொரோனா போராளியின் குடும்பத்திற்கு என்ன செய்தீர்கள்?" தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு!