கோவிட் பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் விவேகானந்தன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மனைவி திவ்யாவுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கோரியும், 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கக் கோரியும் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்கமளிக்க ஆணையிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர். சங்கரசுப்பு, "ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தித் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சாதகமான உத்தரவு பிறப்பித்தும், அதனைத் தமிழக அரசு இதுவரை அமல்படுத்தவில்லை" எனத் தெரிவித்தார். இதற்கு நீதிபதி குறுக்கிட்டு, "உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்றால் ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவில்லை? எதற்காகப் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி மாண்ட மருத்துவரின் குடும்பத்திற்கு எப்படியும் அரசு வேலையும், நிவாரணமும் கிடைத்துவிடும் எனத் தமிழக அரசு மீது முழு நம்பிக்கை வைத்து இத்தனை நாட்கள் காத்திருந்தோம்; அதனால் தான் அவமதிப்பு வழக்கு தொடரவில்லை" என உருக்கமாக வாதிட்டார். ஆனால் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்வதால் தற்போது மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனு குறித்துத் தமிழக அரசு விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆணையிட்டார்.
இதையும் படிங்க: "இனி இஷ்டத்துக்கு கூட்டம் போட முடியாது!" பொதுக் கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தமிழக அரசு அதிரடி!
இதையும் படிங்க: "புயல் பாதிப்பு.. மறுநடவு செய்யத் தண்ணீர் தேவை!" 47-வது காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் பிடிவாதம்!