புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 250கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பியது. ஏற்கனவே கடந்த 15ஆம் தேதி முதல் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர் வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டிருந்தது. புயல் காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் மீண்டும் புழல் ஏரியிலிருந்து இன்று காலை முதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2741 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 18.65 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 556கனஅடியில் இருந்து 2000 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: மிரட்டும் மோந்தா புயல்... தமிழகத்தில் இந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!
சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து மீண்டும் திறக்கப்பட்டு வரும் உபரி நீர் அளவு 250கனஅடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது.
நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் அருகில் சென்று வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பது, ரீல்ஸ் பதிவிடுவது, குளிப்பது, துணி துவைப்பது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: High Alert... ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த “மோந்தா” புயல்.... கதிகலங்கும் கடலோர மாவட்டங்கள்...!