மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இதில் கலந்துகொண்டு ஏ.வி.எம். சரவணன் அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த், தனது ஆரம்பகால சினிமா அனுபவங்களையும், ஏ.வி.எம். நிறுவனத்துடனான உறவையும் மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது என்று தெரிந்தும், தேர்தல் நேரத்திலும் முதலமைச்சர் இங்கு வந்திருப்பது ஏ.வி.எம். சரவணன் அவர்கள் மீது அவர் கொண்டுள்ள மதிப்பிற்குச் சாட்சி என ரஜினி தெரிவித்துள்ளார்.
திரை உலகின் ஜாம்பவான் ஏ.வி.எம். சரவணன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாகவும் அதேசமயம் உணர்ச்சிகரமாகவும் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேடையில் பேசிய ரஜினிகாந்த், “1975-ஆம் ஆண்டு ஏ.வி.எம். சரவணன் அவர்களை முதன்முதலில் பார்த்தேன். 80-களில் ‘முரட்டுக்காளை’ படத்திற்காக அவர்களது அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கே இருந்த சுத்தம் மற்றும் நேர்த்தியைக் கண்டு வியந்து போனேன்” என்றார்.
“அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே அத்தனை படங்களையும் வெற்றிப் படங்களாக மாற்றிய வித்தைக்காரர் அவர். சினிமா மட்டுமன்றி, பலருக்குத் தனிப்பட்ட முறையிலும் எண்ணற்ற உதவிகளைச் செய்துள்ளார்” என ஏ.வி.எம். சரவணன் அவர்களின் சேவைகளை ரஜினி பட்டியலிட்டார். மேலும், தனது பிஸியான வாழ்க்கை முறைக்கு ஏ.வி.எம். சரவணன் கொடுத்த ஒரு அறிவுரையை இன்றும் கடைப்பிடிப்பதாக ரஜினி தெரிவித்தார். “வயதாக ஆக இன்னும் பிஸியாக இருக்க வேண்டும்; வருசத்துக்கு ஒரு படமாவது செய்ய வேண்டும், அதுதான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று அவர் சொன்னார்; அதை இன்றும் நான் செய்து வருகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த செவிலியர்கள் போராட்டம்: 1000 பேருக்கு முதற்கட்டமாக பணி நிரந்தரம்! - தமிழக அரசு அறிவிப்பு!
அரசியல் ரீதியான கருத்துகளையும் ரஜினி முன்வைத்தார். “சிவாஜி படம் அரசியல்வாதிகளுக்கு எதிரானது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், தேர்தல் சமயத்தில் ஒரு முதலமைச்சர் தனது ஒவ்வொரு விநாடியும் முக்கியம் என்று கருதாமல், 100 ஓட்டுகள் கூடக் கிடைக்காது என்று தெரிந்தும் இங்கு வந்திருக்கிறார் என்றால், ஏ.வி.எம். சரவணன் எப்படி வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு அதுவே உதாரணம். அதேபோல், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பண்பும், அன்பும் கொண்ட உயர்ந்தவர் என்பதற்கு இது ஒரு சான்று” என ரஜினி நெகிழ்ச்சியுடன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. முத்துராமன், ஆர்.கே. செல்வமணி, பார்த்திபன் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்று தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.
இதையும் படிங்க: தமிழ்நாடே எதிர்பார்த்த அந்த தருணம்..!! பொங்கல் பரிசு எவ்வளவு தெரியுமா..?? அசத்தல் அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!!