அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பிரச்சனை நீண்டு வருகிறது. தந்தை - மகன் பிரச்சனையானது கட்சியில் எதிரொளித்து பாமகவை துண்டாடிவிட்டது என்றே சொல்லலாம். தனது சொந்த அக்காவின் மகனான முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் ஆரம்பித்தது பிரச்சனை. அதன் பிறகு பிரச்சனை படிப்படியாக வளர்ந்து அன்புமணி தரப்பு, ராமதாஸ் தரப்பு என பிரியும் அளவிற்கு ஏற்பட்டுவிட்டது. பிரச்சனை இன்று ஓயும், நாளை ஓயும் என எதிர்பார்த்து காத்திருந்த பாமக தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் என நிகழ்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாது பாமகவின் தலைவர் யார் என்பதில் போட்டியும் குழப்பமும் நீடித்து வருகிறது. நீதிமன்றம் வரை சென்று விட்டது பாமகவின் பிரச்சனை. 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக கூட்டணியில் இணைந்து சந்திக்க பாமக முடிவு செய்து இருப்பதாக அன்புமணி அறிவித்தார்.

அன்புமணி தலைமையில் அதிமுக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அன்புமணி பாமக சார்பில் கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு என்று தெரிவித்தார். என் தலைமையில்தான் கூட்டணி பேச முடியும் என்றும் நான் அமைக்கின்றதுதான் கூட்டணி எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நான் இருக்கின்ற கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்றும் உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: 2026 தேர்தல்... பாமக சார்பில் போட்டியிடனுமா? விருப்ப மனுக்கள் பெற ராமதாஸ் முடிவு... முக்கிய அறிவிப்பு...!
தந்தையிடம் இருந்து கட்சியை அபகரிக்க நினைத்த இந்தக் கும்பலுக்கா ஓட்டுபோடுவது என்று மக்கள் அன்புமணிக்கு ஓட்டுபோடமாட்டார்கள் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். நான் மத்திய அமைச்சர் ஆக்கிய நபரே எனக்கு வேட்டு வைப்பார் என எனக்குத் தெரியாது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நான் ஆரம்பித்த பாமகவுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் அன்புமணி செய்த தில்லுமுல்லுகளை கணித்தபின் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ரொம்ப தப்பு...! அன்புமணியிடம் அதிமுக கூட்டணி பேசியது ஏற்புடையது அல்ல... ராமதாஸ் கண்டனம்..!