ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் கடலோர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களுடன் அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். வழக்கம்போல் மீன்வளத்துறை அனுமதி பெற்று சென்ற அவர்கள், கச்சத்தீவு–நெடுந்தீவு இடையிலான கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அந்த படகில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், படகையும் பறிமுதல் செய்துள்ளனர். சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பாதுகாப்புச் சட்டம் விரைவில் கொண்டு வருவோம்! வழக்கறிஞர்கள் மாநாட்டில் அமைச்சர் நிர்மல்குமார் வாக்குறுதி!

இந்த கைது செய்தி ராமேஸ்வரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் பரவியதும், மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். ஏற்கனவே இதேபோன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால், மீனவர் சமூகத்தினர் மத்தியில் அச்சமும் அதிருப்தியும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை மீட்டுத் தரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் பிரச்சினைக்கு இந்தியா–இலங்கை அரசுகள் தூதரக ரீதியில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக தமிழக மீனவர்கள் தொடர்பான கைது மற்றும் படகு பறிமுதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால், பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர் அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.
தற்போதைய நிலையில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களை சட்ட நடவடிக்கைக்காக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: போக்சோ வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின், ரகுபதியையும் விசாரிக்க வேண்டும்! SIT முன் தவெக பரபரப்பு மனு!