புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரூபன். ஏ கேட்டகிரி ரவுடியான இவர் மீது மூன்று கொலை வழக்குகள், இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்த காவாங்கரை ரமேஷ் என்கிற நாய் ரமேஷை, அதே பகுதியைச் சேர்ந்த ஏ கேட்டகிரி ரவுடிகளான சரத் மற்றும் அபினேஷ் ஆகியோர் கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொலை வழக்கில் தண்டனை பெற்று வெளியே வந்த இருவரையும் கொலை செய்யப்போவதாகவும், விரைவில் அவர்களது தலைகள் சிதைக்கப்படும் என்றும் ரூபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளருக்கு ஸ்கெட்ச்..! போட்டுத் தள்ள பிளான்..! ரவுடி அதிரடி அரெஸ்ட்..!!
குறிப்பாக, செய்திகளில் வெளியாவதைப் போன்றே அதே பாணியில் இந்த ரீல்ஸை அவர் பதிவிட்டுள்ளார். இருவரையும் கொலை செய்யப்போவதாக அதில் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரவுடிகளைக் கண்காணித்து வரும் மேற்கு மண்டல அதிதீவிர குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரூபனைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து செல்போனைப் பறிமுதல் செய்து, அந்த ரீல்ஸையும் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்ணனைக் கொலை செய்த ரவுடிகளைப் பழிவாங்கும் நோக்கில், செய்திகளில் வெளியாவதைப் போன்றே ரூபன் இந்த ரீல்ஸை வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது, அவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர் ஏதேனும் சதித்திட்டம் தீட்டியுள்ளாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!