சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 8-வது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் புலன் விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவு பதிவு செய்த வழக்குகளில், தொழிலதிபர் ஜெம் வீரமணி, அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட சாந்தி மற்றும் மகேந்திரசிம்ஹன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 29 அன்று கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை மறைத்த கணேசன் என்பவர் செப்டம்பர் 22 அன்றும், சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த வாகன ஓட்டுநர்களான லாசர், பார்த்திபன், பாபு ஆகியோர் அக்டோபர் 5 அன்றும் கைது செய்யப்பட்டனர். மேலும், வீரமணிக்கு உதவிய சிஎன்எஸ் (CNS) நிறுவன மேலாளர் சக்திவேல் அக்டோபர் 18 அன்று கைது செய்யப்பட்டதை அடுத்து, இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜெம் வீரமணி மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமி அளித்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அக்டோபர் 21 அன்று 8-வதாகப் புதிய போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், குற்ற எண் 14/2026 வழக்கில் ஜெம் வீரமணியும், குற்ற எண் 15/2026 வழக்கில் வீரமணி மற்றும் ஓட்டுநர் லாசர் ஆகியோரும் முறைப்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ்: 7 பேர் கைது... 56 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

நீதிமன்ற உத்தரவின்படி, முக்கிய குற்றவாளிகளான ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திரசிம்ஹன் மற்றும் கணேசன் ஆகிய நான்கு பேரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றுப் பொருட்களின் அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையில், ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவிடமும் வீரமணியின் குற்றச்செயல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழக்குகளில் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் 5 முக்கிய நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை (Look Out Circular - LOC) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 12 சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் மிக விரிவான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளின் புலன் விசாரணையை விரைந்து முடித்து, உரிய நீதிமன்றத்தில் விரைவில் இறுதி அறிக்கை (Charge Sheet) தாக்கல் செய்யப்படும் எனச் சிறப்பு புலனாய்வுக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்... புகார் அளிக்க SIT அழைப்பு..! Whatsapp எண்கள் அறிமுகம்..!