சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில், தமிழக அரசு பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கிய வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. கேரள அரசின் தேவஸ்வம் போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இந்தப் பை விற்பனை செய்யப்பட்டதாக பக்தர்கள் தெரிவித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (35), தனது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், மணிகண்டன், ரமேஷ் ஆகியோருடன் கடந்த 21ஆம் தேதி சபரிமலைக்கு சென்றார். அப்போது பம்பையில் உள்ள தேவஸ்வம் போர்டு கடையில் இருமுடி கட்டுவதற்கான பைகளை வாங்கியுள்ளனர்.
அந்தப் பை, தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் வேட்டியில் தயாரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வேட்டியில் தமிழக அரசின் முத்திரையுடன், ‘பொங்கல் 2025 வேட்டி, சேலை வழங்கும் திட்டம்’ என்ற விவரமும் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு எண், ரகம், தொகுப்பு எண் மற்றும் முகமையாக தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BIGBREAKING சபரிமலையில் 55.72 சவரன் தங்க கிரீடம் மாயம்... ஜெயிலர் பட பாணியில் துணிகரம்... ஸ்ட்ராங் ரூமில் போலி கிரீடம் மாற்றம்...!

ஒரு பை ரூ.300க்கு விற்பனை
இந்த இருமுடி பை ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டதாக நவநீதகிருஷ்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைக்குள் இரண்டு தேங்காய்கள், ஒரு சந்தனப் பாக்கெட், ஒரு விபூதிப் பாக்கெட் மற்றும் ஒரு கைப்பிடி பச்சரிசி ஆகியவை இருந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய வேட்டி, சபரிமலையில் விற்பனை செய்யப்படும் இருமுடி பையாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று பக்தர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று ஊழியர்கள் பதிலளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வேட்டி எப்படி வந்தது?
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, கேரளத்தில் உள்ள கடைக்கு எவ்வாறு சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு வழங்கிய வேட்டிகள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டனவா அல்லது வேறு வழியில் அங்கு சென்றனவா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இலவச வேட்டியின் விநியோக நடைமுறை, அது பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் சபரிமலைக் கடைக்கு வந்த பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாக வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை நந்தனத்தில் புதிய தலைமை செயலகம்?! 80 ஏக்கர் கோல்ப் மைதானம் குறித்து நிபுணர்கள் குழு பரிந்துரை!