சத்யபால் மாலிக், இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், பல மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றியவராகவும் அறியப்படுகிறார். 1974ஆம் ஆண்டில், சவுத்ரி சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளத்தின் வேட்பாளராக பாக்பத் தொகுதியில் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980 முதல் 1989 வரை, லோக் தளத்தின் சார்பில் உத்தரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1984இல், அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து, மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக 1986 முதல் 1989 வரை பணியாற்றினார். ஆனால், 1987இல் போஃபோர்ஸ் ஊழல் பிரச்சினையை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ஜன் மோர்ச்சா என்ற கட்சியை உருவாக்கினார்.
இது பின்னர் 1988இல் ஜனதா தளமாக இணைக்கப்பட்டது.1989இல், ஜனதா தளத்தின் வேட்பாளராக அலிகார் தொகுதியில் இருந்து 9வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வி.பி. சிங் அமைச்சரவையில், 1990 ஏப்ரல் முதல் நவம்பர் வரை, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்கான இணை அமைச்சராகப் பணியாற்றினார். 2004இல், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஆனால் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜித் சிங்கை எதிர்த்து பாக்பத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதையும் படிங்க: தென் மாவட்ட மக்கள் ஏமாளிகள் கிடையாது! திமுகவை பந்தாடிய எல்.முருகன்..!

2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2014இல், மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மாலிக் 2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2018 ஆகஸ்ட் வரை பீகார் ஆளுநராக பணியாற்றினார். 2018 மார்ச் முதல் மே வரை ஒடிசாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார். 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை, ஜம்மு-காஷ்மீரின் கடைசி ஆளுநராக இருந்தார். 2019 முதல் 2020 வரை கோவாவின் 18வது ஆளுநராகவும், 2020 முதல் 2022 அக்டோபர் வரை மேகாலயாவின் 21வது ஆளுநராகவும் பணியாற்றினார்.
தனது அரசியல் பயணத்தில் பல முக்கிய பதவிகளை வகித்த சத்திய பால் மாலிக் என்று உயிரிழந்தார். 86 வயதான சத்தியபால் மாலிக் நுரையீரல் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சத்ய பால் மாலிக் மறைவால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும், அமைதியின் ஊடாக உயர்ந்து, அதிகாரத்திற்கு உண்மையைப் பேசத் துணிந்த ஒரு மனிதர் என்றும் தெரிவித்தார். அவரது மனசாட்சி அவரது பதவியுடன் ஓய்வு பெறவில்லை என்றும் வரலாறு அவர் வகித்த பதவிகளை மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளையும் நினைவில் வைத்திருக்கும் எனவும் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: பரிதவிக்கும் மக்கள்.. பல் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க மனசு வரலையா? விளாசிய ஓபிஎஸ்..!