ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இது 2025 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலுக்கு முதன்மையான காரணம், அத்தொகுதியின் முந்தைய உறுப்பினர் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு. அவர் 2024 இறுதியில் இயற்கை எய்தினார்.
அதற்கு முன்பு, 2023இல் அவரது மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானதால் ஒரு இடைத்தேர்தல் நடந்தது. அதில் இளங்கோவன் வென்றார். தொடர்ந்து EVKS மறைவால் இடைத்தேர்தல் வந்தது.இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எம்.கே. சீதாலட்சுமியை விட 91,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்தன. எனவே, முதன்மையான போட்டி திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே அமைந்தது.இந்த இடைத்தேர்தலின் மைய அம்சமாக மாறியது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பிரச்சாரம். சீமான், திராவிட இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் தந்தை பெரியார் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பெரியாரை தமிழர்களை அவமதித்தவர் என்றும், தமிழ் மொழியை "காட்டுமிராண்டி மொழி" என்று பெரியார் கூறியதாகக் குறிப்பிட்டும், பெரியாரின் சில கருத்துகளை சித்திரித்தும் பேசினார்.
இதையும் படிங்க: பெரியார் சமத்துவப் பாதையில் சமூகநீதியை வென்றெடுப்போம்... தந்தை பெரியாருக்கு விஜய் மரியாதை...!
இந்தப் பேச்சுகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சார காலத்தில் தீவிரமடைந்தன. இதனை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது ஈரோடு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட ஆறு வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக ஈரோடு J.M.3 குற்றவியல் நடுவர் மன்றத்தில் சீமான் ஆஜராகி உள்ளார்.
இதையும் படிங்க: ஆதிக்கத்தை சுட்டெரித்த பேரொளி... என்றும் பெரியார் சமூக நீதிப் பாதையில்...! EPS புகழ் மகுடம்...!