ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அண்மையில் இந்தியாவுக்கு வந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பு, குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். இந்த சந்திப்பின் விளைவாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது உலைக்கான முதல் தொகுதியாகிய அணு எரிபொருளை இரஷ்யாவின் ரோஸாடோம் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது என்றும் இந்த நடவடிக்கை, அணு உலை 3ஐ விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியப் படி என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், அணு உலை 3 மற்றும் 4க்குத் தேவையான எரிபொருளை அவற்றின் முழு சேவை ஆயுட்காலத்திற்கும் வழங்க இரஷ்யா நீண்டகால ஒப்பந்தம் செய்துள்ளது எனவும் கூறினார். தமிழ்நாட்டு நலனை பாதிக்கும் திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்குக்கூட முற்படாமல் இரஷ்ய அதிபர் முன்மொழிவதும், அதை இந்திய அரசு முனைந்து முன்னெடுப்பதும் அடிப்படை இயற்கை நீதிக்கே முரணானது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

செயல்பாட்டில் உள்ள உலைகளின் செயல்திறனை மேலும் அதிகரிக்கும் வகையில், ரோஸாடோம் வழங்கியுள்ள மேம்பட்ட எரிபொருள் மூலம், அணு உலைகளின் செயல்பாட்டுச் சுழற்சி 12 மாதங்களிலிருந்து 18 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் செர்னோபில் போன்ற ஒரு பெரிய விபத்துக்கான பேராபத்தும் அன்றாட செயல்பாடுகளால் ஏற்படும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகளும் உள்ளடக்கிய திட்டத்தினைத் தமிழர் நிலத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு கடும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் பேசுறத பத்தி யார் கிட்ட கேட்டீங்க? விஜயின் புதுவை விசிட் குறித்த கேள்வியால் கடுப்பான சீமான்..!
பேராபத்தினை சந்திக்கும் முன்னர், பிற நாடுகள் சந்தித்த வரலாற்று நிகழ்வுகளின் வழியே இந்திய அரசு சிந்தித்து, அணு ஆற்றல் தொடர்பான அனைத்து முன்னெடுப்புகளையும் கைவிட வேண்டும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்க மேம்பாட்டு முன்னெடுப்புகளை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், திமுக அரசு மத்திய அரசின் எவ்வித முன்னெடுப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிடக் கூடாது என்றும் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கடலில் விழுந்து காணாமல் போன மீனவர்... கண்டுக்காம இருக்கீங்களே?.. சீமான் ஆதங்கம்...!