கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். இவர் ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போது கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதிமுகவில் தொய்வு ஏற்பட்டதால் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிடம் கூறியதாகவும் அதனை ஏற்கும் நிலையில் அவர் இல்லை எனவும் தெரிவித்தார். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.
இதையும் படிங்க: என்னப்பா நடக்குது? செங்கோட்டையன் வீட்டின் முன்பு திரளும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

இதனை அடுத்து கட்சிப் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். அதுமட்டுமல்லாது செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சி பதவியையும் பறித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுக்கப் போவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று சொன்னதில் இருந்து ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையனுக்கு தொடர் ஆதரவு தெரிவித்து வருகிறார். அவரது ஆதரவாளர்களும் செங்கோட்டையினை சந்தித்து வருகின்றனர்.
செங்கோட்டையன் வீட்டின் முன்பாக ஏராளமான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டனர். இந்த நிலையில், சிங்காநல்லூர் சிவன் கோவிலில் இருந்து பிரசாதத்தை கொண்டு வந்து செங்கோட்டையனுக்கு கொடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். கோவையைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிவன் கோவில் பிரசாதத்தை செங்கோட்டையனிடம் கொண்டுவந்து கொடுத்ததுடன், சால்வை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், அர்ச்சகர்கள் செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டினர். அதிமுகவை ஒன்றிணைப்பேன் என செங்கோட்டையன் கூறியதிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அணி அணியாக செங்கோட்டையனை நோக்கி வருகை தருகின்றனர்.
இதையும் படிங்க: அப்டியே விட்ருவோமா? ஒருங்கிணைப்பு குழு ரெடி! மாஸ் காட்டும் செங்கோட்டையன்...