அதிமுக தலைமை மீது அதீத அதிருப்தியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போது, கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சசிகலா, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோரின் பெயர்களை குறிப்பிடாமல் பொதுவாக கட்சியிலிருந்து விலகியவர்கள் என்று குறிப்பிட்டு அவர்களை மீண்டும் இணைத்தால்தான் வெற்றிவாகை சூடி நல்லாட்சி அமைக்க முடியும் என்று தெரிவித்தார்.
இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போதும் இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக தனது பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். 2016 க்கு பின் தேர்தல் களம் போராட்ட களமாக மாறிவிட்டது என்பதை நாம் அறிவோம் என்றார். 2019, 2021, 2024 உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்தபோது களத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறினார். 2024 பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் 30 இடங்களை வெற்றி பெற்று இருக்கலாம் என்றும் அதிமுகவில் தோய்வு ஏற்பட்டதாக மற்றும் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிடம் கூறியதாகவும் அதனை ஏற்கும் நிலையில் அவர் இல்லை எனவும் தெரிவித்தார்.

வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார். வெளியே சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் வெற்றி என்ற இலக்கை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார். வெற்றி வாகை சூடுவதற்கு, நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். மனமகிழ்ச்சியோடு எதிர்காலத்தை நோக்கி மக்கள் நினைப்பதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார். விரைந்து அதனை செய்யுங்கள் என்றும் பத்து நாட்களுக்குள் இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சின்னம்மா RETURNS! சசிகலா - செங்கோட்டையன் சந்திப்பு? பரபரக்கும் அரசியல் களம்..!
அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போது பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், தங்களுடைய கோரிக்கையை விரைந்து நிறைவேற்றும் என்பது தான் ஆசை என்றும் கூறினார். யார் யாரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது பொதுச்செயலாளர் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் அதிமுகவுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்வதற்கு தன் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: திமுகவை ஒழிக்க நம் வலிமையை காட்ட வேண்டும்.. அதிமுகவை ஒன்று சேர அழைக்கும் சசிகலா..!!