தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், அனைத்து தகுதியுள்ள குடிமக்களையும் உள்ளடக்கியதாகவும் வைத்திருப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 19, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பல லட்சம் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், பெயர் விடுபட்டவர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தம் தேவைப்படுபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று மற்றும் நாளை தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இது ஏற்கெனவே டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முகாம்களின் தொடர்ச்சியாகும். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளபடி, இந்த முகாம்கள் தகுதியுள்ள குடிமக்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க எளிதாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்து ஜனவரி 1, 2026 அன்று தகுதி பெறுபவர்கள், முகவரி மாறியவர்கள், பெயர் அல்லது பிற விவரங்களில் திருத்தம் தேவைப்படுபவர்கள், அத்துடன் வரைவுப் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த முகாம்களில் பூத் லெவல் அதிகாரிகள் (BLO) நேரடியாக இருப்பார்கள். அவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று, ஆவணங்களைச் சரிபார்த்து, உடனடியாக செயல்படுத்த உதவி செய்வார்கள். புதிய பெயர் சேர்க்க அல்லது விடுபட்ட பெயரைச் சேர்க்க படிவம் 6ஐப் பயன்படுத்த வேண்டும். முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மாற்றம் அல்லது மாற்றுத்திறனாளி எனக் குறிப்பிடுதல் போன்றவற்றுக்கு படிவம் 8 தேவை.
இதையும் படிங்க: என் பேரு எங்கய்யா? வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட முதியவர்...!
தேவையற்ற அல்லது தகுதியற்ற பெயர்களை நீக்கக் கோர படிவம் 7ஐப் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் ஆதார் அட்டை, முகவரி ஆதாரம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் செய்ய விரும்புபவர்கள் இந்தச் சிறப்பு முகாம்களைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?... இன்றும், நாளையும் இதை கட்டாயம் செய்யுங்க....!