தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உலகப் புகழ்பெற்ற முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்றிரவு நடைபெறவுள்ளது. இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சியைக் காண பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வாகனங்களில் குவிந்து வருகின்றனர். கடற்கரை மைதானத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும் என்பதால் அப்பகுதி முழுவதும் பக்திப் பரவசம் நிலவுகிறது.குலசேகரபட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் தசரா திருவிழா அக்டோபர் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒன்பது நாட்கள் பல்வேறு திருக்கோலங்களில் அம்மன் காட்சியளித்த நிலையில், பத்தாம் நாள் இன்றிரவு மகிஷாசுரமர்த்தினி வடிவில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்த்தப்படும். சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனைச் சூழ்ந்து நின்று பக்தி முழக்கங்களுடன் காணத் தயாராகி வருகின்றனர்.இத்தகைய பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பலத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் தலைமையில் சுமார் 3700 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 கண்காணிப்புக் கோபுரங்கள் மூலம் முக்கியப் பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன. 300க்கும் மேற்பட்ட நிலையான சிசிடிவி கேமராக்கள் மற்றும் நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.பக்தர்கள் வாகனங்களில் அதிக அளவில் வருவதால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: களைகட்டிய குலசை தசரா திருவிழா..! படையெடுக்கும் மக்கள்... அணிவகுக்கும் வாகனங்கள்..!!
உலோக ஆயுதங்கள் கொண்டு வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.திருவிழாவின் இறுதி நாள்களில் பக்தர்கள் பெருமளவில் குவிவதால் காவல்துறை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பக்தர்கள் ஒழுங்காக ஒத்துழைத்து நிகழ்ச்சியை அமைதியாகக் கண்டுகளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு குலசேகரபட்டினம் முழுவதும் பக்திச் சூழல் நிலவுகிறது. அம்மன் அருளைப் பெற பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!