தமிழக அரசியல் களத்தில் பாமக மற்றும் விகே.சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இந்தக் கூட்டணிக்குத் தமிழ் மீனவர்கள் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, தமிழ் மீனவர்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ரஜினிமகி இன்று நேரில் சந்தித்தார். அப்போது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை அவர் வழங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிமகி, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லும்போதோ அல்லது இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும்போதோ, அவர்களுக்காக முதன்முதலில் குரல் கொடுப்பவர் மருத்துவர் ராமதாஸ் தான். மீனவர் நலனில் உண்மையான அக்கறை கொண்ட ஒரே தலைவர் அவர் என்பதால், எங்கள் கூட்டமைப்பில் உள்ள ஒரு லட்சம் மீனவர்களின் ஆதரவையும் அவருக்கு வழங்குகிறோம். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மீனவர்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரத்தை வழங்கவில்லை, என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாத்தூர் தொகுதியில் போட்டியா? சஸ்பென்ஸை உடைத்த நயினார் நாகேந்திரன்!
மீனவர்கள் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக வரும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் மட்டுமே அப்படிச் சொல்கிறார்கள். விஜய் இந்தத் தேர்தல் முடிந்தவுடன் அரசியலில் இருப்பாரா இல்லையா என்பதே தெரியாது. 2026 தேர்தலுக்குப் பிறகு விஜய் எங்கு இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது, என்று காரசாரமாகப் பதிலளித்தார்.
மீனவர்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வரும் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான கூட்டணி, இந்தத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவின் பி-டீமாக மாறிவிட்டது அதிமுக! திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!