தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வரும் தேர்தலில் தொகுதி மாறப்போவதாகப் பரவி வரும் தகவல்கள் குறித்து இன்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். நயினார் நாகேந்திரன் இந்த முறை தனது சொந்தத் தொகுதியான திருநெல்வேலியை விட்டுவிட்டு, விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்தது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்.
நெல்லை தொகுதி மக்கள் என்னை 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒருமுறை எம்.பி-யாகவும் அங்கீகரித்துத் தேர்ந்தெடுத்துள்ளனர். திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் எதில் வேண்டுமானாலும் போட்டியிடும் தகுதி எனக்கு இருக்கிறது, என்று கூறினார்.

சாத்தூர் தொகுதி குறித்துப் பரப்பப்படும் செய்திகளுக்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்காத அவர், நெல்லை மண்டலத்தில் தனக்குள்ள செல்வாக்கைச் சுட்டிக்காட்டினார். நெல்லை நாடாளுமன்ற எல்லைக்குள் இருக்கும் தொகுதிகளிலேயே தனது கவனம் இருப்பதாக அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், கட்சியின் மேலிடம் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையின் முடிவிலேயே இறுதித் தொகுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: பாஜகவின் பி-டீமாக மாறிவிட்டது அதிமுக! திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!
நயினார் நாகேந்திரன் மீண்டும் நெல்லையிலேயே போட்டியிடுவாரா அல்லது புதிய தொகுதியைத் தேர்வு செய்வாரா என்பது தென் மாவட்ட பாஜகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தொகுதி மாறினால், அது திருநெல்வேலி மற்றும் சாத்தூர் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல் சமன்பாடுகளிலும் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அண்ணாமலையின் தொகுதி குறித்த ஆலோசனையைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: நானும் ராதிகாவும் தேர்தலில் நிற்க மாட்டோம்! பாஜகவில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சரத்குமார் ஆதங்கம்!