தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப் திட்டத்தில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. லேப்டாப் மேற்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை சில மாணவர்கள் அழித்து விடுகின்றனர். அவர்களுக்குப் பிடித்தவர்களின் படங்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
இந்நிலையில், எல்காட் (தமிழ்நாடு மின்னணு கழகம்) அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். லேப்டாப் மேற்புறத்தில் உள்ள இந்த படம் மற்றும் அதில் அடங்கிய சீரியல் எண் இருந்தால் மட்டுமே ஒரு ஆண்டு வாரண்டி (பழுது நீக்க உத்தரவாதம்) பெற முடியும். படத்தை அழித்து விட்டால் அல்லது சீரியல் எண் சேதமடைந்தால் வாரண்டி கிடைக்காது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எல்காட் அதிகாரிகள் கூறுகையில், “மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்களுக்கு ஒரு ஆண்டு வாரண்டி உள்ளது. அதைப் பெற படம் மற்றும் சீரியல் எண் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் சர்வீஸ் செய்ய முடியாது” என்றனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் வருகிறார் மோடி!! எடப்பாடி - நயினார் போட்ட பக்கா ஸ்கெட்ச்! பொங்கலுக்கு பிறகு சர்ப்ரைஸ்!

ஆனால், லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் (எச்பி, டெல், லெனோவா போன்றவை) தரப்பில் வேறு கருத்து உள்ளது. பொதுவாக வாரண்டி பெற உட்புறத்தில் சேதம் இல்லாமலும், இயக்க முறைமை (OS) மாற்றப்படாமலும், சீரியல் எண் இருந்தால் போதும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விஷயம் தெரிந்தவர்கள் கூறுகையில், அரசு வழங்கும் லேப்டாப்களுக்கு வாரண்டி தொடர்பான பொறுப்பு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குத்தான் உள்ளது. எல்காட் தனியாக வாரண்டி மறுக்க முடியாது. தேவைப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சர்ச்சை மாணவர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடை எடுத்துட்டு போங்க! சென்னை உட்பட 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை!! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!