சென்னை: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், நிறுவனங்களுக்கு தேவையான அரசு அனுமதிகள் மற்றும் மானியங்கள் குறித்த காலத்துக்குள் கிடைப்பதை கண்காணிக்க, தலைமைச் செயலர் தலைமையில் தமிழக முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் திட்டங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படுவதை கண்காணிப்பதே இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழகத்தை வரும் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் இலக்கை அரசு முன்வைத்துள்ளது. இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, தொழில் நிறுவனங்கள் மாநிலத்தில் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியை தொடங்குவதற்கான சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பல்வேறு துறைகளின் அனுமதிகளை விரைவாக வழங்கும் வகையில் தமிழக வணிக எளிதாக்குதல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் (திருத்த) சட்டம் செப்டம்பர் 15-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளுக்கப்போகுது மழை... குடைக் கொண்டு போங்க மக்களே... 19 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்..!!
புதிய அமைப்பில் தலைமைச் செயலர் தலைமையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில், தொழிலாளர் நலன் உள்ளிட்ட 20 துறைகளின் செயலர்கள் இடம்பெறுகின்றனர்.
பல துறைகளை உள்ளடக்கிய பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு தேவையான அனுமதிகள் மற்றும் சலுகைகள் ஒருங்கிணைந்த முறையில் கிடைப்பதை இந்த ஆணையம் கண்காணிக்கும்.
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள், தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்குவது முதல் உற்பத்தி தொடங்கும் நிலை வரை எதிர்கொள்ளும் நிர்வாக சிக்கல்களும் கண்காணிக்கப்படும்.

ஒரு துறையில் அனுமதி தாமதமானால், அந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவாக தீர்வு காண்பதும் ஆணையத்தின் பணிகளில் ஒன்றாக இருக்கும்.
மேலும், தொழில் நிறுவனங்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதுடன், முதலீட்டாளர்களின் தேவைகளை கேட்டறிந்து, அதற்கேற்ப எதிர்கால தொழில் கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைகள் வழங்கவும் இந்த அமைப்பு செயல்படும்.
ஏற்கனவே இடம்பெற்றுள்ள துறைகளுக்கு அப்பால், புதிய தொழில் திட்டங்களை முன்னெடுக்கும் பிற துறைகளின் செயலர்களையும் தேவைக்கேற்ப ஆணையத்தில் இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தொழில் முதலீட்டு சூழலில் அனுமதிகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளால் ஏற்படும் தாமதங்களை குறைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர நடைமுறை மற்றும் காலக்கெடு அடிப்படையிலான அனுமதி முறைகள் செயல்பட்டு வருகின்றன.
புதிய ஆணையத்தின் செயல்பாடுகள் நடைமுறையில் எவ்வாறு அமல்படுத்தப்படுகின்றன என்பதும், 21 நாள் இலக்கு பெரிய முதலீட்டு திட்டங்களில் உண்மையில் எந்த அளவுக்கு அனுமதி காலத்தை குறைக்கிறது என்பதும் தொழில் துறையினரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: இனி இப்படித்தான்! இந்தியாவுடன் மோதினால் பதிலடி நிச்சயம்! மன் கி பாத்தில் பிரதமர் மோடி எச்சரிக்கை!