தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாகவும், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக விளங்கிய தமிழ்நாடு, தற்போதைய ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது கவலை அளிப்பதாக அவர் கூறினார்.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், அண்டை மாநிலங்களான கேரளாவில் 23 சதவீதமும், ஆந்திரப் பிரதேசத்தில் 24 சதவீதமும், கர்நாடகாவில் 18 சதவீதமும், தெலங்கானாவில் 14 சதவீதமும் வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 3 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளதாகத் தென்னரசு சுட்டிக்காட்டினார். மற்ற மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருப்பது கவனிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கியப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் காரணமாக மாநிலத்தின் ஒட்டுமொத்த வரி வருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், மாநிலத்தின் சொந்த உற்பத்திப் பொருட்கள் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார். இது வெறும் வரி வருவாய் தொடர்பான புள்ளிவிவரமாக மட்டும் பார்க்கப்படக் கூடாது. மாறாக, மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதாரத் தேக்க நிலையை வெளிப்படுத்தும் முக்கியமான அளவீடாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.எனவே, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பியிருக்காமல், தமிழ்நாட்டின் சொந்த உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்று தென்னரசு அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..! தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!
மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும். இதற்கான உரிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கடன் தேவை எவ்வாறு குறைந்தது?... பாயிண்ட்களை அடுக்கி தவெக அரசுக்கு செக் வைத்த தங்கம் தென்னரசு...!