தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், இனி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் இணைந்தே அரசியல் பயணம் அமையும் என அறிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்த 100வது நாளில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் அவர் இதை வெளியிட்டார். இதற்கு முன் தவெக ஆட்சி அமைவதற்கு விசிக ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இப்போது முழுமையான கூட்டணி அறிவிப்பு வந்துள்ளது.
இந்த அறிவிப்பு அரசியல் விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஏனெனில் கடந்த சில வாரங்களாக தவெக பாமகவுடன் நெருக்கம் காட்டி வந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் விஜய்யுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார். சட்டசபையில் சௌமியா அன்புமணியின் பேச்சுகள் பாராட்டப்பட்டன. முதல்வரும் அவரது கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். இதன் உச்சமாக ராமதாஸுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்க தவெக முடிவு செய்தது.

ஆனால் அவர் மறுத்ததால், அந்த விருது சௌமியாவின் தந்தை கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது. இதனால் தவெக-பாமக நெருக்கம் மேலும் பேசப்பட்டது. இந்தச் சூழலில் திருமாவளவன் விரைவாக கூட்டணி நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கும் அவர், இந்த முறை தனியாகவே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், இவ்வளவு அவசரம் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: "அத்தை சீர்.. பாட்டி சீர் நாங்கதானே குடுக்கணும்"..! வேளாண் பட்ஜெட்... சௌமியா அன்புமணி விமர்சனம்.!!
அறிவிப்பு வெளியான அடுத்த நாளே அவர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதுவரை முதல்வர் விஜய் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.அரசியல் வட்டாரங்களில் இந்த நடவடிக்கைக்குப் பின்னணியில் பாமகவுடனான தவெகவின் நெருக்கமே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
விசிக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டதால், பாமகவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பது இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசியலில் கூட்டணிச் சமன்பாடுகள் மாறி வரும் இந்தக் கட்டத்தில், விசிக-தவெக இணைப்பு மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு சதி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!