சென்னையில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தூத்துக்குடி சென்றடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் எஸ் ஐ ஆர் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார். வாக்குத்திருட்டு பீகாரிலேயே பாஜக அணியினருக்கு வெற்றி வாகையை தந்திருப்பதாக கூறிய அவர், 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அந்த 47 லட்சம் பேரும் அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களா என்று கேட்டால் இல்லை என்றும் தெரிவித்தார்.
வாக்குரிமையை பறிக்கக்கூடிய நடவடிக்கையாக எஸ் ஐ ஆர் அமைந்திருப்பதாக குற்றம் சாட்டிய திருமாவளவன், எஸ் ஐ ஆர் திருத்தத்தை பாஜக அரசு மேற்கொண்டு இருப்பதற்கான நோக்கம் என்ன என்று விளங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படக்கூடிய நிலைமை இருப்பதாக கூறிய அவர், அந்த ஒரு கோடி பேரும் வாக்குரிமையை பறி கொடுப்பதோடு குடியுரிமையையும் பறிகொடுக்கக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையம் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்றும் இவை அனைத்தையும் எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவையில் பதிவு செய்து இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: சதி கும்பல் வேலை செய்யுது..! நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தானே பதவி விலகணும்... திருமா. வலியுறுத்தல்...!
இதையெல்லாம் ஆளுங்கட்சி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலை அழிப்பதாக தெரிவித்த திருமாவளவன், வாக்குரிமை மட்டுமில்லாமல் குடிமக்களின் குடியுரிமையையும் பறிக்கக் கூடிய ஆபத்தான அரசியல் நடந்து கொண்டிருப்பதாகவும் நாடு எந்த திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற கவலை மேலோங்கி விட்டதாகவும் தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் மூலம் தமிழகத்தில் எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் பட்டியலில் இருந்து வெளியேற்றிவிட்டு வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது என்றும் அதனை தடுக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமை எனவும் கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் பின்னணியில் பாஜக... அதிமுகவிற்கு வார்னிங் கொடுத்த திருமா...!