திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் மேட்டுக்கண்டிகை பகுதியில் கடந்த 5ஆம் தேதி, பூந்தமல்லி-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள தனியார் ஏடிஎம் சேவை மையத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
மேற்கு தாம்பரம்-கிஷ்கிந்தா சாலையில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் இருந்து அமரர் ஊர்தி வாகனத்தை கொண்டு வந்து, அதன்மூலம் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, அமரர் ஊர்தியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் ஏடிஎம் கொள்ளையில் அதிரடி திருப்பம்... ராஜஸ்தான் வரை சென்று வடமாநில இளைஞரை தூக்கிய தமிழக போலீஸ்...!
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று கொள்ளையர்களை கைது செய்திருப்பதாக வெள்ளவேடு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஐந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஏற்கனவே அந்தப் பகுதியை நோட்டமிட்ட பின்னரே இந்தக் கொள்ளையை அரங்கேற்றியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் உள்ள மற்றொரு இடத்திலும் ஏடிஎம் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், தற்போதைய ஏடிஎம் கொள்ளைக்கும் அந்தச் சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரின் முழுமையான விவரங்கள் இதுவரை காவல்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை. அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்ட பின்னரே, இவர்கள் இதே கும்பலைச் சேர்ந்தவர்களா, மேவாட் கொள்ளையர்களா அல்லது வேறு யாரேனுமா என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின் வாரியத்தை அதானிக்கு தாரை வார்ப்பதா.? நியாயமா CM சார்.? வெளுத்துவிட்ட அப்பாவு..!!