திருச்சியில், மதிய உணவு கொண்டு வர தாமதமானதால் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை, ஸ்க்ரூ டிரைவரால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவர் அப்பகுதியில் ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி கவிதா, தினமும் வீட்டில் சமைத்த உணவை கணவருக்கு கடைக்கு கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், சம்பவத்தன்று கவிதா உணவு கொண்டு வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சம்பத்குமார், மரக்கட்டையால் கவிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING “என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” - விருதுநகரில் வீடு புகுந்து அம்மா, மகளுக்கு அரிவாள் வெட்டு... நடந்தது என்ன?
இதில் காயமடைந்த கவிதா குறித்து, அவரது பெற்றோருக்கு சம்பத்குமார் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததுடன், அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு கவிதா சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு வந்த சம்பத்குமார், ஸ்க்ரூ டிரைவரால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான சம்பத்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையை உலுக்கிய தந்தை, மகன் கொடூர கொலை..! மேலும் 2 பேர் சரண்... தொடரும் விசாரணை..!