காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 6 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு. 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளி அமரேஷ் பிரசாத் நேற்றிரவு தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு உயிரிழந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி வடமாநில தொழிலாளர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் வடமாநிலத் தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் காவல்துறையினர் வடமாநிலத் தொழிலாளர்களை குடியிருப்பிற்குள் விரட்டியடித்தனர். சம்பவ இடத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: பரபரப்பு...L&T நிறுவனத்தில் வடமாநில தொழிலாளி பலி! ஊழியர்கள் போராட்டத்தில் கல்வீச்சு
தொடர்ந்து காவல்துறை முன்னிலையில் தொழிற்சாலை மேலாளர் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிடவும் தொழிலாளியின் சடலத்தை விமானத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உத்தரவாதம் அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்டு வட மாநில தொழிலாளியின் உறவினர்கள் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக சென்றனர்.
இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 6 பிரிவுகளில் போலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு அதிகாரி உத்தரவை மீறுதல், ஆயுதங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு மணி நேரத்தில வாஷ் அவுட் ஆகணும்! காவல்துறைக்கு மதுரை கிளை அதிரடி உத்தரவு!