முதல்வர் ஜோசப் விஜய் நீலாங்கரை இல்லத்திலிருந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதிக்கு இடம்பெயரத் திட்டமிட்டிருப்பதாக உயர் அதிகார வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, அவர் தினமும் நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு வந்து சென்று வருகிறார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தை முகாம் அலுவலகமாகப் பயன்படுத்தி வரும் அவர், பெரும்பாலும் நீலாங்கரை இல்லத்திலிருந்தே பயணம் மேற்கொள்கிறார்.
நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகம் சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வழியில் பல இணைப்புச் சாலைகள் இருப்பதால், முதலமைச்சர் பயணத்தின் போது பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சாலைப் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்குக் கடும் நெரிசலும் இடையூறும் ஏற்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, தலைமைச் செயலகத்துக்கு அருகாமையில் தங்குவதற்கு முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் வசிக்கும் ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அரசு இல்லங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொல்காப்பியர் பூங்காவுக்கு எதிரே அமைந்துள்ள பொதிகை வளாகத்தில் உள்ள அரசு இல்லத்தைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு வசித்த வீடாகும். இந்த இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யுடன் போட்டியா..?? தனுஷின் அரசியல் நகர்வு திருப்புமுனையாகாது..!! ஒரே போடாக போட்ட அமைச்சர்!!
பசுமை வழிச்சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் காமராஜர் சாலையை அடைந்து, சில நிமிடங்களிலேயே தலைமைச் செயலகத்தை அடைய முடியும். உயர் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் வசிக்கும் பகுதி என்பதால் பாதுகாப்பு அம்சமும் வலுவானதாக உள்ளது. தற்போது காலியாக இருக்கும் இந்த வளாகத்தைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்த பிறகு, முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு, இறுதி முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து இடையூறு குறையும் என்பதுடன், நிர்வாகப் பணிகளும் இன்னும் விரைவாக நடைபெற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: சென்னைக்கு விரைவில் விடிவு... 2 முக்கிய பாலங்களை கையிலெடுத்த தவெக அரசு... சி.எம்.விஜய் அதிரடி முடிவு...!