தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் வரும் நாட்களில் மழை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு–வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நகர்வு மற்றும் வலிமையைப் பொறுத்து தமிழகத்தில் மழையின் தீவிரம் மாறக்கூடும்.
இன்றும், நாளையும் எங்கு மழைக்கு வாய்ப்பு?
அக்டோபர் 12ஆம் தேதியான இன்று, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம், திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!
அக்டோபர் 13ஆம் தேதியான நாளை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர் 16 முதல் கனமழைக்கு வாய்ப்பு
அக்டோபர் 16ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் ஏழு நாள் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
எனவே, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் நேரம், அதன் நகர்வு மற்றும் மழையின் தீவிரம் ஆகியவற்றை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!