தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அரசுப் பேருந்துகள் சந்திக்கும் கோர விபத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்றின் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உடல் நசுங்கிப் பலியாகினர். இதேபோல், கடந்த மாதம் காரைக்குடி - திண்டுக்கல் மார்க்கத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் பிரேக் பிடிக்காமல் பேருந்து கவிழ்ந்ததில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வாறாக கடந்த 30 நாட்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட உயிர்கள் அரசுப் பேருந்து விபத்துகளால் பறிபோயுள்ளன.
இந்தத் தொடர் விபத்துகளுக்குப் பேருந்துகளின் முறையற்ற பராமரிப்பு மற்றும் டயர் கோளாறுகளே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட போக்குவரத்துத் துறை, அனைத்துப் பணிமனைகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி பேருந்துகளைத் டெப்போக்களில் இருந்து எடுப்பதற்கு முன்பாக, பிரேக் அமைப்பு மற்றும் டயர்களின் செயல்திறனை மெக்கானிக்குகள் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக, டயர்களில் உள்ள ‘வீல் நட்டுகள்’ இறுக்கமாக இருப்பதை உறுதி செய்த பிறகே பேருந்தை இயக்க அனுமதிக்க வேண்டும். மழைக்காலங்களில் விபத்துகளைத் தவிர்க்க முகப்பு விளக்குகள் மற்றும் வைப்பர் மோட்டார்கள் சரியாக இயங்குகிறதா என்பதைச் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறாமல் இருப்பதை மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், மழை நேரங்களில் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிமனைகளில் உள்ள டீசல் சேமிப்புக் கிடங்குகளில் தண்ணீர் கலக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்பே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்ற விதியையும் அரசு அமல்படுத்தியுள்ளது. ஓட்டுநர்கள் அல்லது நடத்துநர்கள் பேருந்தின் பழுது குறித்துப் புகார் தெரிவித்தால், அதனை உடனடியாகச் சரிசெய்து தர வேண்டும் என மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணிகள் குறித்துத் தொடர்ச்சியான அறிக்கைகளைத் தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை தனது வழிகாட்டுதலில் கறாராகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கேரளா டூ தமிழ்நாடு நோ என்ட்ரி! பறவை காய்ச்சலால் எல்லையில் கெடுபிடி! பொது சுகாதாரத்துறை அதிரடி!
இதையும் படிங்க: தமிழகத்தை அச்சுறுத்தும் நாய் கடி: இந்த ஆண்டு மட்டும் 5.50 லட்சம் பேர் பாதிப்பு!