2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றி கழகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. விடுபட்டுள்ள தொகுதிகளுக்கு கட்சி பொறுப்பாளர்களை விஜய் நியமனம் செய்வார் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னல் மற்றும் பிற நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் மற்றும் பவுன்சர்கள் அவர்களை அப்புறப்படுத்தி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் காரை கட்சி அலுவலகத்திற்குள் செல்ல வைத்தனர். மெதுவாக மோதி தள்ளியபடி கார் சென்றது. தனக்கு பொறுப்பு வழங்கவில்லை எனக் கூறி அஜிதா ஆக்னல் மன வருத்தத்துடன் கண்ணீர் சிந்தினார். பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைத்த தன்னை ஒதுக்கி உள்ளதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

விஜயின் காரை வழிமறித்த பெண் நிர்வாகியை அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டிருந்த நிலையில், சமாதானத்தை ஏற்காமல் விஜயின் காரை வழிமறித்த தவெகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தவெக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். என்ன நடந்தாலும் நியாயம் கிடைக்கும் வரை நகர மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி இருந்தனர்.
இதையும் படிங்க: விஜய் தமிழ்நாட்டின் எதிர்காலம் என அறிந்தவர் செங்கோட்டையன்... ஆதவ் அர்ஜுனா பெருமிதம்..!
இதனிடையே, இறுதி மூச்சு உள்ள வரை என் தாய் கழகமான தமிழக வெற்றிக் கழகத்தோடும், எம் தலைவர் தளபதி விஜயோடும் மட்டும் தான் எனது அரசியல் பயணம் தொடரும் என்று அஜிதா ஆக்னல் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்கு சென்றாலும் அவர் விசுவாசிதான்... MGR திருவுருவ படத்திற்கு செங்கோட்டையன் மரியாதை...!