நேற்றைய தினம், காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகள் பிரச்சினையை வலியுறுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், காவிரி பிரச்சினையை மட்டும் அல்லாமல் ஆளுங்கட்சி குறித்தும் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார்.
மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மௌனம் காக்கிறார் என்றும், அவரது செயல்பாடுகளை திமுக எதிர்க்கும், தக்க பதிலடி அளிக்கும் என்றும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதோடு, தனிப்பட்ட முறையிலும் சில கருத்துகளை முன்வைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதர்ஷ் அர்ஜுனா ஆகியோர் கடுமையான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: 'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!
குறிப்பாக, #ஆபாசநிதி என்ற ஹேஷ்டேக்கின் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட பதிவில், "எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பின் மாண்பையும் மரபையும் உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதர்ஷ் அர்ஜுனா தனது பதிவில், "பேரறிஞர் அண்ணா தனது தமிழ்ப் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று ஆபாச மொழிகளாலும் தரக்குறைவான பேச்சுகளாலும் அழித்து வருபவர் ஆபாசநிதி" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபோல அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதற்கு முன்பாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கவும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் பெண் நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டங்களிலும் பெண் நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முறையான புகார் அளிக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்துவதற்காக கட்சியினர் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர்.
நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, உடனடியாக இந்தப் போராட்டத்தை நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!