தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இருப்பினும், பல குடும்பங்கள் விஜயை சந்திக்க மறுத்து வருவதால், இந்த சந்திப்பு தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் சம்பவம் தமிழக அரசியல் அங்கங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியது. 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த இந்த துயரத்தில், விஜய் இதுவரை நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை. வீடியோ கால் மூலம் 2-3 நிமிடங்கள் பேசியதாகவே அவரது பங்களிப்பு இருந்தது. தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 'ஓட்டு கேட்க வருகிறாரா' என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: அப்படியா சார்? யார் காலாவதி ஆவாங்கன்னு இன்னும் ஒரே மாசத்துல தெரியும்..! மாஜி அமைச்சருக்கு டிடிவி பதிலடி...!
முதலில் கரூரில் திருமண மண்டபம் ஒன்றில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மண்டப உரிமையாளர்கள் இடம் வழங்க மறுத்ததால், திட்டம் ரத்தானது. இதையடுத்து, 41 குடும்பங்களையும் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு அழைத்து, தனித்தனி சந்திப்புகளை நடத்த தவெக நிர்வாகிகள் திட்டமிட்டனர். இந்த சந்திப்புகளை விஜய் நேரடியாக நடத்தவுள்ளதாகவும், போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் இருந்து எதிர்ப்பு வெளிப்படுகிறது. "நாங்கள் ஏன் சென்னைக்கு போக வேண்டும்? விஜய் கரூருக்கு வந்து சந்திக்கட்டும்" என்று பலர் கூறுகின்றனர். சில குடும்பங்கள், சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் தடியடி மற்றும் மர்ம நபர்களின் தாக்குதல்களை குற்றம்சாட்டியுள்ளனர். அதோடு நாங்கள் 30வது நாள் காரியங்களை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் நாங்கள் எப்படி விஜயை பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளனர்.
இதனால், மாமல்லபுரம் சந்திப்பு ரத்தாகலாம் என்ற அச்சம் தவெக வட்டாரங்களில் நிலவுகிறது. இதற்கிடையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகியை சந்தித்து, சம்பவத்தின் ஆதாரங்களை அளிக்க தவெக திட்டமிட்டுள்ளது. மேலும் கரூர் செல்ல போலீஸ் அனுமதி கோரி டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய், "அனுமதி கிடைத்ததும் சந்திப்போம்" என்று முன்பு அறிவித்திருந்தார்.
இந்த சந்திப்பு விஜயின் அரசியல் பயணத்தில் முக்கியமானதாக இருக்கும். குடும்பங்களின் ஒத்துழைப்பு கிடைத்தால், அது தவகவின் மனிதநேயத்தை வலியுறுத்தும். இல்லையெனில், சோக நிகழ்வின் பின்னணியில் மேலும் சர்ச்சைகள் எழலாம். தவெக அறிவிப்புக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்த நிகழ்வை விஜய் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்ததாக கட்சி தெரிவித்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை கரூரில் உள்ள அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திக்காமல், கடலோர ரிசார்ட்டிற்கு வரவழைப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறாது என்று தவெகவை சேர்ந்த பலரும் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தவெகவின் அரசியல் பெயருக்கு சவாலாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மன உறுதியைப் பெறுவது இன்று விஜயின் முதல் சோதனை. சந்திப்பு நடைபெறுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை...!!
இதையும் படிங்க: பிளான் CHANGE… விஜய் கரூருக்கு போகலையாம்! ஏன் தெரியுமா?