சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் நாளை (மார்ச் 7) மாமல்லபுரத்தில் சிறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கழகத் தலைவர் விஜய் பங்கேற்று, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான மகளிருக்கான பிரத்யேகத் திட்டங்களை அறிவிக்க உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. என். ஆனந்த் வெளியிட்டுள்ள தலைமை நிலையச் செயலக அறிவிப்பில் நாளை சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் (Four Points by Sheraton) ஹோட்டலில் இந்த விழா நடைபெறுகிறது.
சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தவெக-வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ள மகளிருக்கான முக்கியத் திட்டங்கள் மற்றும் நலவாரிய அறிவிப்புகளை இந்த மேடையில் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ஏற்கனவே க்யூஆர் கோடு (QR Code) வசதியுடன் கூடிய டிஜிட்டல் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனுமதிச் சீட்டு இல்லாத எவருக்கும், கழகத் தோழர்களோ அல்லது பொதுமக்களோ, அரங்கிற்குள் நுழைய அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகள் மற்றும் சமூக வலைதளங்களில் கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கழகத்தின் சார்பில் மகளிர் தின விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மகளிர் அணிக்கு மருத்துவர் உட்பட 11 புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டிய விஜய், நாளை பெண்களைக் கவரும் வகையிலான எந்த மாதிரியான "மெகா" அறிவிப்புகளை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தஞ்சையில் நாளை விஜய்! செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு!