தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், கர்நாடகாவின் மேகதாது திட்டம் தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி நீர் உரிமை தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் என்றும், அதைப் பாதுகாப்பதில் இனியும் தாமதம் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குகள் மட்டுமே முக்கியமா, தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை முக்கியமில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், மேகதாது திட்டத்திற்கான அனுமதியும் நிதி நடவடிக்கைகளும் விரைந்து நடைபெற வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
ஆகஸ்ட் 13 அன்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நீர்வள ஆணையம் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கர்நாடகா கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.கர்நாடகா தனது அத்துமீறிய திட்டத்திற்காகத் தலைநகர் தில்லியில் நேரடியாகக் களமிறங்குகிறது. தமிழ்நாடு தனது நியாயமான காவிரி உரிமைக்காக என்ன செய்யப் போகிறது என்று கேட்ட அவர், கர்நாடக முதலமைச்சருக்குத் தில்லிக்குச் சென்று அழுத்தம் தர நேரம் இருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தனது மாநிலத்தின் நீருரிமைக்காகத் டெல்லிக்குச் செல்ல நேரம் இல்லையா என்று வினவினார்.

கர்நாடகா மத்திய அரசிடம் தனது கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கும்போது, தமிழ்நாடு தனது எதிர்ப்பை அதே வலிமையோடு பதிவு செய்யப் போவது எப்போது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.மேகதாது தொடர்பாகக் கர்நாடகா புதிய திட்ட அறிக்கையை முன்வைத்து ஒப்புதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நிலையில், தமிழ்நாடு இனியும் வெறும் வாய்மொழி எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிலையிலேயே தேங்கிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார். மத்திய அரசு ஒரு முடிவை எடுத்த பிறகு எதிர்ப்பதா, அல்லது முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவதா என்று கேட்ட அவர், மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்காகவும் வாக்குக் கேட்பதற்காகவும் தொகுதிகளுக்கு விரைந்து செல்லும் தமிழக ஆட்சியாளர்கள், வாக்குக் கேட்கத் தொகுதிகளுக்குச் செல்ல முடிகிறது. தமிழ்நாட்டின் தண்ணீருக்காகத் டெல்லிக்குச் செல்ல முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அரசு நிகழ்ச்சியில் ராம் யாத்திரை..! மதசார்பற்ற கொள்கைக்கு ஆபத்தா..? வேல்முருகன் காட்டம்..!
இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாளர்களும், கட்சிகளும், தமிழ்நாட்டின் நீர் உரிமைகளுக்காக முக்கியத்துவம் தரவில்லையே ஏன் என்று வினவிய அவர், தமிழ்நாட்டின் விவசாயம் குறித்து, தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து, அடுத்த தலைமுறை குறித்து இவர்களுக்கு அக்கறை இல்லையா என்றும், இவர்கள்தான் எதிர்காலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லப் போகிறார்களா, இப்படியானவர்களைத்தான் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றும் கேட்டார். தேர்தல் களத்தில் காட்டப்படும் அரசியல் வேகம், காவிரி உரிமைக் களத்தில் ஏன் காணப்படவில்லை, மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் வாக்குகளைத் தேடும் அவசரம், தமிழ்நாட்டின் நீருரிமையைக் காப்பதில் இல்லையே ஏன் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேகமலை மக்களின் உரிமை..! அரசுக்கு கள்ளமௌனம் ஏன்.? வேல்முருகன் கேள்வி..!!