தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குற்றங்கள் அதிகரித்து தமிழ்நாடு 'Wild Wild Tamil Nadu' ஆக மாறிவிட்டதாகவும், வாக்களிக்காதவர்கள் மட்டுமல்லாமல் வாக்களித்த மக்களுமே புலம்பும் அவல ஆட்சியாக தவெக ஆட்சி உருவெடுத்துள்ளதாகவும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மிகக் காட்டமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து, பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதை முன்கூட்டியே கணித்துத்தான், தேர்தலுக்கு முன்பு நாஸ்ட்ரடாமஸ் போல இது என்ன நாடா இல்லை காடா? என்று விஜய் பேசினாரா எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரையில் துப்பாக்கி ஹீரோ எனப் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, நிஜத்தில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கத் துப்பில்லாத ஹீரோவாக மாறிவிட்டார் எனப் பேசத் தொடங்கிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார். கோட் சூட் மற்றும் பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையிலிருந்து முதலமைச்சர் விஜய் எப்போது விடுபடுவார் என்று கேள்வி எழுப்பியுள்ள மு.க. ஸ்டாலின், முதலமைச்சருக்கான அலுவலகம் மற்றும் இல்லத்தைத் தயார் செய்யும் ஆடம்பரப் பணிகளைத் தவிர, கடந்த ஆறு மாத கால தவெக ஆட்சியில் உருப்படியாக வேறு எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லை என்று சாடியுள்ளார்.
இதையும் படிங்க: கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!
தனது சொந்த சொகுசு குறித்துக் காட்டும் அக்கறையில் சிறிதேனும் தமிழ்நாட்டுப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தமிழ்நாடு கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் மாறி வருவது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அயோத்தியை ஆண்டது ராமனின் செருப்பு! தமிழகத்தை ஆள்வது? திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!