இந்திய டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த சானியா மிர்சாவின் 22 ஆண்டுகால வரலாற்று சாதனையைத் சுக்குநூறாக உடைத்து, சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளார் 17 வயதேயான இளம் புயல் மாயா ராஜேஸ்வரன் ரேவதி.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ITF) சார்பில் போர்ச்சுகல் நாட்டின் லாகோஸ் நகரில் நடைபெற்ற டபிள்யு35 (W35) மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுகள் உலக டென்னிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. உலகெங்கிலும் இருந்து முன்னணி வீராங்கனைகள் களமிறங்கிய இத்தொடரில், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று இரட்டை மகுடம் சூடி மாயா ராஜேஸ்வரன் முத்திரை பதித்துள்ளார்.
ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் முன்னணி நட்சத்திர வீராங்கனையான செர்வினோ ரூயிஸை நேருக்கு நேர் எதிர்கொண்ட மாயா, தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்திய அவர், இரண்டாவது செட்டிலும் அதிரடியைத் தொடர்ந்து 6-2 என்ற நேர் செட் கணக்கில் எதிராளியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

ஒற்றையர் பிரிவோடு நிற்காமல், மகளிர் இரட்டையர் பிரிவிலும் உக்ரைன் வீராங்கனை எலிசவெட்டா கோட்லியருடன் கைகோர்த்து மாயா ராஜேஸ்வரன் அசாத்திய சாதனை படைத்தார். சீனா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த லியு மின் - கார்லோட்டா மொசியா ஜோடியை எதிர்கொண்ட இறுதி ஆட்டத்தில், முதல் செட்டை 0-6 என இழந்த போதிலும் சற்றும் தளராமல் 2-வது செட்டை 6-2 என வென்று பலமான கம்பேக் கொடுத்தனர். போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானித்த அனல் பறக்கும் சூப்பர் டை-பிரேக்கர் சுற்றில் அபார உத்வேகத்துடன் விளையாடிய மாயா இணை, 10-7 என்ற புள்ளிக் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று இரட்டையர் கோப்பையையும் கைப்பற்றியது.
இந்த இரட்டை வரலாற்று வெற்றியின் மூலம், இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சாவின் 22 ஆண்டுகால சாதனையை மாயா ராஜேஸ்வரன் முறியடித்துள்ளார். முன்னதாக கடந்த 2004-ஆம் ஆண்டில் சானியா மிர்சா தனது 17 வயது 10 மாதங்களில் ஐ.டி.எஃப் தொழில்முறை ஒற்றையர் பட்டத்தை வென்றதே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது வெறும் 17 வயது 3 மாதங்களிலேயே சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் தொழில்முறைத் தொடரில் பட்டம் வென்றதன் மூலம், இந்த சாதனையை நிகழ்த்திய மிக இளம் வயது இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றுச் சிகரத்தை மாயா ராஜேஸ்வரன் ரேவதி எட்டியுள்ளார். உலக அரங்கில் சாதனை படைத்த தமிழகத்தின் இளம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ சஸ்பெண்ட்..!! போர்ச்சுக்கல் கால்பந்து அணி அதிரடி!!