பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். 700க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போராடிவரும் செவிலியர்களுடன் அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் மிரட்டும் துணியில் பேசுவதாக செவிலியர் சங்கச் செயலாளர் குற்றம் சாட்டினார்.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின்படி சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடி வரும் செவிலியர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவது, ஊரப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைப்பது என அலை கழிக்கும் அராஜக போக்கை திமுக கையாளுவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அருவருப்புடன் சிலர் விலகிச் செல்லும் நோயாளிகளையும் மனிதநேயத்துடன் முகம் சுழிக்காது தாயுள்ளத்துடன் பேணி வரும் செவிலியர்களை, ஏதோ கொலைக் குற்றவாளிகளைப் போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா என்றும் நூற்றுக்கணக்கான செவிலியப் பெண்களைப் பசி, பட்டினியுடன் அடிப்படை வசதிகளின்றி ஒரு மண்டபத்தில் அடைத்து வைப்பது தான் திமுக அரசின் வெல்லும் தமிழ்ப் பெண்களுக்கான இலக்கணமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆட்சியே முடியப்போகிறது, ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதிகளை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என எந்தப் பிரிவினர் கேட்டாலும் அவர்களின் குரல்வளையை நெரிப்பது என்ன விதமான மனநிலை என்று சரமாரியான கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்... தவெக தூய சக்தியா? சேலத்தில் EPS பிரஸ் மீட்...!
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தினால் மிரட்டும் தொனியில் பேசுவது எந்த வகையில் நியாயம் மாரத்தான் அமைச்சரே என மா. சுப்பிரமணியனுக்கு அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற வேண்டுமா என்பது போன்ற கேள்விகள் அராஜகத்தின் உச்சம் இல்லையா என்றும் மாவட்டம்தோறும் சென்று விழாக் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு போராடும் செவிலியர்களை பார்க்க நேரம் இல்லையா என்றும் கேட்டது. பெயருக்கு தான் மகளிர் ஆட்சி என்றும் ஆனால் போராடும் மகளிருக்கு பாதுகாப்பில்லை எனவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையில்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாக செவிலியர்கள் பேசும் காணொளியை பகிர்ந்து அதிமுக கடுமையாக சாடியுள்ளது.
இதையும் படிங்க: செவிலியர்களை விடுவிக்கணும்... வாக்குறுதியை நிறைவேற்ற EPS வலியுறுத்தல்...!