தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாகப் போட்டியில் களமிறங்கி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மைக்கு அருகில் வந்தது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முடிவுகள் திமுகவுக்கு மட்டுமல்ல, அதன் நீண்டகால கூட்டணிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே அரசியல் காய் நகர்த்தல்கள் தொடங்கின. தவெக பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவைத் தேடியபோது, திமுகவின் முக்கிய கூட்டணிக் கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றம் காட்டின. முதலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடனான நீண்டகால உறவை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி இவ்வாறு முறிந்தது. காங்கிரஸ் தனது ஐந்து எம்.எல்.ஏ.க்களுடன் தவெக அரசு அமைக்க உதவியது.
காங்கிரஸின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆகியவையும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளும் இதே போக்கைக் காட்டின. சில கட்சிகள் முழுமையாக விலகின, சிலர் ஆதரவு அளித்தபோதும் கூட்டணியை விட்டு விலகவில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தன. இந்த அணிசேர்க்கை மாற்றங்கள் தவெகவுக்கு 119க்கும் மேற்பட்ட ஆதரவை உறுதிப்படுத்தின.
இதையும் படிங்க: அலுத்து போச்சு..! கேவலமான காரியத்தை திமுக செய்யாது..! ஆர்.எஸ். பாரதி பேட்டி..!!

மே 10, 2026 அன்று விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வுகள் திமுகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றன. நீண்டகாலம் ஆட்சி செய்த திமுக, தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தள்ளப்பட்டது. மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கூட்டணிக் கட்சிகளின் விலகல் திமுகவின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்தியது. கூட்டணி கட்சிகள் இல்லையென்றாலும் திமுக தனது பலம் பொருந்திய அரசியல் செல்வாக்கால் உயரும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக எம்.பி ஆ.ராசாவின் கருத்து பேசு பொருளாக மாறி உள்ளது.
இன்று நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆ.ராசா, இனிமேல் யாருடனும் திமுகவிற்கு கூட்டணி இல்லை என்றும் இனி தனித்து நின்று வெற்றிபெறும் என அறிவியுங்கள் எனவும் வலியுறுத்தினார்.234 தொகுதியிலும் தனித்து நிற்போம் தலைவரே என்றும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!