தமிழர்களின் வீரமும், நாகரிகமும் செழித்தோங்கிய பொருநை ஆற்றங்கரை நாகரிகம், உலக வரலாற்றின் திசையை மாற்றியமைக்கும் சான்றாகத் திகழ்கிறது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நெல்லையில் நடைபெற்ற விழாவில் காணொலி வாயிலாகப் பேசினார். சுமார் ரூ.56.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரும்புக்காலத் தமிழர்களின் வாழ்வியலை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகத்தை' அவர் இன்று திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... நெல்லைக்குப் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்...!

முதலமைச்சர் வெளியிட்ட வீடியோவில், "இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இது வெறும் மேடை அலங்காரப் பேச்சு அல்ல, அறிவியல்பூர்வமான உண்மை என்பதை நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறது. மதுரை கீழடியைத் தொடர்ந்து, இப்போது திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தைக் கம்பீரமாக உருவாக்கியிருக்கிறோம். இரும்பை உருக்கிக் கருவிகள் செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்திருக்கிறது என்பதைச் சிவகளையில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ளோம். காலத்தால் முந்தைய இரும்பு சிவகளையில் கிடைத்ததுதான் என்பதை 2025 ஜனவரியில் நான் உலகிற்கு அறிவித்தேன்" என்று வைத்தார்.

தமிழர்களின் தொன்மையை அயல்நாட்டு அறிஞர்களான தாலமி, பிளினி மற்றும் ராபர்ட் கால்டுவெல் போன்றோர் வியந்து பாராட்டியதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், "கொற்கையின் முத்துக்கள் உலகப் புகழ்பெற்றவை. ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில் இரும்புக் காலத்துத் தடயங்கள் ஏராளமாக உள்ளன. கீழடி அருங்காட்சியகத்தை இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரில் கண்டு வியந்துள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டின் வேர்களைத் தேடி வரும் அனைவரும் தங்களது குடும்பத்தோடு இந்தத் பொருநை அருங்காட்சியகத்திற்கும் அணி அணியாக வர வேண்டும்" என்று தமிழக மக்களுக்கு அன்பான அழைப்பு விடுத்தார். இரவு நேர மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் இந்த அருங்காட்சியகம், நெல்லை மாவட்டத்தின் புதிய அடையாளமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை பயணம்: 65 கோடியில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா!