முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளைத் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 27-ஆம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுமார் 2,096 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 314 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன், 46 புதிய திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டி, 2,66,194 பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கத் திட்டமிட்டுள்ளார். விழா நடைபெறவுள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் உள்ள மைதானத்தில் அமைக்கப்படவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை முதல்வர் திறந்து வைத்து, அங்குள்ள அரங்குகளையும் பார்வையிட உள்ளார். இதற்காக 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, முதல்வர் தொடங்கி வைக்க உள்ள மத்திய பேருந்து நிலையப் பணிகள் மற்றும் பூ மார்க்கெட் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை அவர் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: 2 மாவட்டங்களில் டைரக்ட் விசிட்... திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!
தொடர்ந்து, கலைஞர் திடலில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட விழா மேடை, பயனாளிகளுக்கான இருக்கை வசதிகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விரிவாகக் கலந்துரையாடினார். விழா ஏற்பாடுகள் அனைத்தையும் எவ்விதக் குறைபாடுமின்றி விரைந்து முடிக்க வேண்டும் எனத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். முதல்வரின் இந்த வருகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருவண்ணாமலை மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிப்காட் ஆய்வு முதல் கலைஞர் சிலை திறப்பு வரை - முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பயணம்!