சென்னையில் கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.299 கோடி மதிப்பிலான 15 கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான CMDA கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால், இந்த திட்டங்களை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
CMDA தொடங்கப்பட்ட காலம் முதல் நகர்ப்புற திட்டமிடல், கட்டட அனுமதி உள்ளிட்ட பணிகளில் முக்கியமாக செயல்பட்டு வந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டமைப்பு திட்டங்களிலும் CMDA ஈடுபடுத்தப்பட்டது. எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி, 2025-26ம் நிதியாண்டில் சென்னையில் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள், முதல்வர் படைப்பகங்கள், பொது நூலகம், அரசு மருத்துவமனை மேம்பாடு, நடைமேம்பாலம் உள்ளிட்ட பணிகளுக்காக 15 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.299 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான திட்டங்களுக்கு இடங்களும் தேர்வு செய்யப்பட்டிருந்தன. சில பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கும் நிலைக்கும் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு வந்த அடுத்த அமெரிக்க ஜாம்பவான்! சென்னையில் ஸ்டார்பக்ஸ்! CM விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்!

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஏற்கனவே தொடங்கிய பணிகளுக்கே ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதாகவும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது சிரமமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CMDA-வின் நிதி நிலை குறித்து கடந்த ஜூலை மாதமே கவலைகள் எழுந்திருந்தன. கட்டமைப்பு பணிகளுக்காக அதிக அளவில் நிதி செலவிடப்பட்டதால், முதல்முறையாக தமிழக அரசிடம் நிதியுதவி மற்றும் மானியம் கோரும் நிலைக்கு CMDA சென்றதாக தகவல் வெளியானது.
தற்போது ரூ.299 கோடி மதிப்பிலான 15 திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற குழுமக் கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பாரதி மகளிர் கல்லூரி மேம்பாடு, அரசு பள்ளிகள், முதல்வர் படைப்பகங்கள், பிராட்வே பொது நூலகம் உள்ளிட்ட பல திட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. திட்டங்கள் முழுமையாக கைவிடப்படுமா அல்லது மாற்று நிதி மூலம் பின்னர் செயல்படுத்தப்படுமா என்பது அடுத்தகட்ட முடிவுகளில் தெரியவரும்.
இதையும் படிங்க: கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!