காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான பிரச்சனை பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் ஒன்று. இந்தப் பிரச்சனையின் சமீபத்திய மற்றும் முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது மேகதாது அணைத் திட்டம். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மேல் பகுதியில் மேகதாது என்ற இடத்தில் ஒரு பெரிய தடுப்பணை கட்ட முயற்சி செய்து வருவதை தமிழ்நாடு உரிமை மீறல் என்று கருதி கடுமையாக எதிர்க்கிறது. இந்தத் திட்டம் காவிரி நீர் பங்கீடு தீர்ப்புகளை மீறுவதாகவும், தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேகதாது இடம் கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில், பெங்களூரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், காவிரியும் அர்க்காவதி ஆறும் இணையும் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. கர்நாடக அரசு இங்கு சுமார் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டத் திட்டமிட்டுள்ளது.

இதன் முக்கிய நோக்கங்கள் பெங்களூருக்கு குடிநீர் வழங்குதல், மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகும். திட்டத்தின் மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்... காங்கிரஸ் கட்சி போராடும்..! செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்..!
இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒன்று கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கர்நாடக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!