தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே அனல் பறக்கும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. தன்னை 10 முறை தோல்வியடைந்தவர் என்று விமர்சித்த ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் இன்று தனது பிரசாரத்தில் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் கடந்த காலத் தேர்தல் வரலாற்றைச் சுட்டிக்காட்டி ஸ்டாலினைச் சாடினார்.
என்னை 10 முறை தோல்வியடைந்தவர் என்று ஸ்டாலின் கூறுகிறார். தோல்வி என்பது வீரனுக்கு அழகு, ஆனால் முதுகில் குத்துவது திமுக-வின் குணம். நாங்கள் மக்களுக்காகப் போராடித் தோற்றிருக்கிறோம், ஆனால் உங்கள் ஆட்சியில் மக்கள் படும் அவதிக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி! தாம்பரத்தில் எடப்பாடியார் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!

ஸ்டாலின் அவர்களே, எங்களைப் பார்த்துப் பேசும் முன்பு உங்கள் வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். உங்கள் தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே, ஒருமுறை திமுக-வுக்குச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூடக் கிடைக்கவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள், என்று அவர் பழைய வரலாற்றை நினைவூட்டிச் சாடினார்.
தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துள்ள திமுக, அண்டை மாநிலங்களில் அவர்களுக்கு எதிராகப் போட்டியிடும் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தல் திமுக-வுக்கு ஒரு முடிவுரையாக இருக்கும்; அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வது உறுதி, என்று எடப்பாடி பழனிசாமி தனது உரையில் முழங்கினார். ஸ்டாலினின் தொடர் விமர்சனங்களுக்கு எடப்பாடியார் அளித்துள்ள இந்தத் தரமான பதிலடி, அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி!