தமிழகத்தின் நாமக்கல் நகரின் மையத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டைக்கு மேற்கே, 18 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லினால் ஆன பிரம்மாண்ட ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் சிலை 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கருதப்படுகிறது. இவர் இடுப்பில் வாளுடனும், சாளக்கிராம மாலையுடனும் காட்சியளிக்கிறார். கூரையோ, கோபுரமோ இன்றி வெட்டவெளியில் நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் இவருக்கு, இந்த ஆண்டு டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று அனுமன் ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மார்கழி திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். இந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஜெயந்தி விழாவான இன்று நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டது.
காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்க்கு பின்னர் மஞ்சள்,சந்தனம்,பன்னீர்,தயிர்,பால்,தேன்,திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டவுள்ளது.
இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு ஜொலி ஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடக மாநில பகுதியை சேர்ந்த ஏராளமானோர் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "என்னை ஏன் வம்பில் இழுத்துவிடுகிறீர்கள்?" ... விஜய் பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன ஓபிஎஸ்...!
ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில் பிரகாரம் முழுவதும் 2 டன் எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு சாத்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
ஆஞ்சநேயரின் வடை மாலைக்கான வடை தயாரிக்கும் பணியில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 35 பேர் கடந்த 14ம் தேதி ஈடுபட்டனர். 2050 கிலோ உளுந்த மாவு, 600 கிலோ நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடை தயாரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: “மாஸ்டரின் பிளாஸ்டர்”... விஜய்யின் ‘ஈரோடு’சபதம்.. 30 நிமிட பேச்சில் இதை எல்லாம் கவனிச்சீங்களா?