சென்னை உயர்நீதிமன்றம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ரகுபதி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சிந்தாமணியை 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், சிந்தாமணி ரகுபதியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தேர்தல் நடைமுறைகளில் குளறுபடிகள் இருந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் எழுப்பியிருந்தார். அதனால் ரகுபதியின் வெற்றியை ரத்து செய்து தன்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ரகுபதி தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சிந்தாமணி தாக்கல் செய்த தேர்தல் மனுவில் சட்டப்படி தேவையான முக்கிய விவரங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்றும், அது காரண காரியத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் வாதிடப்பட்டது.

தேர்தல் மனுக்களில் குறிப்பிட்ட விவரங்கள் மற்றும் பொருள்சார்ந்த உண்மைகள் இல்லாமல் வழக்கு தொடர முடியாது என்பது சட்ட விதி என்றும், அதன்படி இந்த மனு ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் ரகுபதி தரப்பு வாதங்களை முன்வைத்தது.நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்தார். சிந்தாமணி தாக்கல் செய்த தேர்தல் மனுவில் சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட முக்கிய உண்மைகள் மற்றும் விவரங்கள் இல்லாததை நீதிமன்றம் கவனித்தது. தேர்தல் மனு என்பது சாதாரண வழக்கு அல்ல; அது மிகவும் தீவிரமான விவகாரம். அதில் வெறும் பொதுவான குற்றச்சாட்டுகளை மட்டும் எழுப்பினால் போதாது.
இதையும் படிங்க: "ஆதவ் அர்ஜுனாவிற்கு கை சுத்தமில்ல"..! தள்ளுபடி செய்யுங்க..! மான நஷ்ட ஈடு வழக்கில் ஸ்டாலின் பதில் மனு..!!
தேர்தல் முடிவை பாதித்தது எப்படி என்பதை குறிப்பிட்ட விவரங்களுடன் தெளிவாகக் கூற வேண்டும். அப்படி இல்லாத நிலையில் வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என நீதிபதி கருதினார்.இதையடுத்து, ரகுபதி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிந்தாமணி தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின் மூலம் திருமயம் தொகுதியில் ரகுபதியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற முடியும்.
இதையும் படிங்க: சேவல் சண்டைக்கு தடை இல்லை..! முறைப்படுத்தும் சுற்றறிக்கை... உயர்நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்.!!