காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரவுள்ள வார இறுதி தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் பொதுமக்களின் பயண நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா நோக்கிப் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியல் பல நூறுகளைத் தாண்டி நிரம்பி வழியும் நிலையில், பயணிகளின் வசதிக்காகத் தாம்பரம் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து இந்தச் சிறப்பு ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்: 06123) அக்டோபர் 1-ஆம் தேதி இரவு 11:55 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் பகல் 12:15 மணிக்குத் தென்காசி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06124) அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 5:40 மணிக்குச் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்குத் தாம்பரம் வந்து சேரும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் ஏசி குளிர்சாதனப் பெட்டிகள், படுக்கை வசதிப் பெட்டிகள் மற்றும் பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் ஆகிய முக்கிய நிலையங்கள் வழியாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இதேபோல் மேற்கு மாவட்டப் பயணிகளுக்காக, டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்: 06023) அக்டோபர் 1-ஆம் தேதி இரவு 11:55 மணிக்குச் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9:15 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் போத்தனூர் – சென்னை கடற்கரை சிறப்பு ரயில் (வண்டி எண்: 06024) அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:00 மணிக்குச் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும். இதுதவிர, கேரளா செல்லும் பயணிகளின் வசதிக்காக எர்ணாகுளம் – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் (06056 / 06055) இரு மார்க்கங்களிலும் முறையே அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன.
மேலும், தென் மாவட்டப் பயணிகளின் தொடர் கோரிக்கையை ஏற்றுத் தாம்பரம் – மானாமதுரை இடையே முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06159 / 06160) அக்டோபர் 1 அன்று தாம்பரத்திலிருந்தும், அக்டோபர் 4 அன்று மானாமதுரையிலிருந்தும் இயக்கப்படவுள்ளது. அத்துடன் திருநெல்வேலி – தாம்பரம் இடையே ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் (06166 / 06165) சேவை கூடுதலாக மேலும் ஒரு முறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து முன்பதிவு சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை (அக்டோபர் 1) காலை 8:00 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய கவுன்ட்டர்களில் தொடங்கும் எனத் தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!